நவம்பர் மாதம் வந்தவுடன், பார்ப்பவர்களை பயமுறுத்தும் வகையில் கிடா மீசை வைப்பது வழக்கம். இந்த வருடம் வைக்கலாமா-வேணாமா-வேணாமா-வைக்கலாமா என்று இங்கி-பிங்கி போட்டு பார்த்து வைத்தாகிட்டது (யார்றா அது, அதுக்குள்ள, போட்டோ கேக்கறது? பார்க்க!).
15–44 வயதுள்ள ஆஸ்திரேலிய ஆண்களின் (தடுக்க முடிகிற) இறப்புகளுக்கான முதன்மை காரணம் - தற்கொலை.
ஆஸ்திரேலியாவில் சராசரியாக, ஒவ்வொரு நாளும் சுமார் 6 ஆண்கள் தற்கொலை செய்து கொண்டு இறக்கின்றனர்.
என்ன காரணம் என்று தெரிய வேண்டுமெனில், ManUp! என்ற டாக்குமென்டரியை பாருங்கள்.
2003-ஆம் ஆண்டில், மெல்பர்னில், வழக்கமா பீர் அருந்திக் கொண்டிருந்த இரு தோழர்கள் (Bros), ‘இப்பல்லாம் ஆண்கள் மீசை (Mo - moustache) வளர்ப்பதே இல்லை’ என்று அவர்களுக்குள் கேட்க ஆரம்பித்து, திரும்பவும் முறுக்கு மீசையை ஃபேஷன் ட்ரெண்டாக மாற்ற, ‘மாத்துவோம்-எல்லாத்தையும்-மாத்துவோம்’-னு செய்த முயற்சிதான் மொவம்பர்.
அவர்களுக்குத் தெரிந்தவரின் அம்மா ஒருவர், பெண்களின் மார்பக புற்று நோய்க்கு நிதி திரட்டியதை இன்ஸ்பிரஷனாகக் கொண்டு, ஆண்களின் உடல்நலம், மனவளம் (Physical and Mental wellbeing) மற்றும் புரோஸ்டேட் புற்றுநோய் (Prostrate Cancer) குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவை தொடர்பான ஆராய்ச்சிகளுக்கு நிதி திரட்டவும் மொவம்பர் (Movember) திட்டத்தை வடிவமைத்தனர். மீசை வளர்க்கும் ஆண் மோ ப்ரோ (Mo Bro); மொவம்பர்க்குல் பங்கேற்கும் பெண் - மோ சிஸ்டா (Mo Sista).
மூவம்பரின் மூன்று முக்கிய விதிகள் (இப்ப அஞ்சாயிடுச்சி!) மற்றும் ஒவ்வொருத்தரும் குறைந்தது பத்து டாலர்கள் வசூலிக்க ஒப்புக்கொள்ள வேண்டும். முதல் வருடத்தில் 30 மோ பிரதர்ஸ் மீசை வளர்த்தார்கள்; சென்ற வருடம் உலகம் முழுவதும் 400,000 மோ பிரதர்ஸ் பங்கேற்று 121 மில்லியன் ஆஸ்திரேலிய டாலர்கள் திரட்டினர்.
முதல் விதி
Movember.com-ல் பதிவுசெய்ததும், சுத்தமான ஷேவ் செய்த முகத்துடன் நவம்பர் முதல் தேதி தொடங்கவேண்டும்.
இரண்டு விதி
மூவ்ம்பர் மாதம் முழுவதும் மீசையை வைத்திருக்க வேண்டும்.
மூன்று விதி
தாடி, கோட்டி (Goatee) மற்றும் போலி (fake stickers) மீசைகள் கணக்கில் வரா.
நான்கு விதி
என்ன புதுசா மீசை வைச்சுருக்கீங்கன்னு கேட்டா (யாராவது கேட்டாதானே!), ஆண்களின் உடல், மன நலன்களைப் பற்றி பேச வேண்டும்.
ஐந்தாம் விதி
ஒவ்வொரு மோ ப்ரோவும் ஒரு சிறந்த ஆணாக (True Genteman) நடந்து கொள்ள வேண்டும்.
மொவம்பர்க்கு நன்கொடை நல்கும் உள்ளங்களுக்கான இணைப்பு. தங்கள் நன்கொடைக்கு நன்றி!
Comments