TLDR; ஆஸ்திரேலிய தமிழர்கள், அந்நியர்களாக வாழ வேண்டியதில்லை. இங்கே நடக்கும் உள்நாட்டு அரசியலை புரிந்துகொள்ளுங்கள். கடமைகளை தவறாமல் செய்யும் நாம், நம் உரிமைகளையும் தெரிந்துகொள்ள வேண்டும். நம் சமூகத்திற்கு என்ன தேவையென்று அறிந்துகொண்டு, கேட்டுப்பெற்றுத் தர முன்வரவேண்டும்!
ஆஸ்திரேலிய தமிழர்கள் நிறைய பேசும் இரு விஷயங்கள் - தமிழ் சினிமா மற்றும் தமிழ்நாட்டு (இந்திய) அரசியல். நீங்கள் ஆஸ்திரேலியாவில் நிரந்தர குடியுரிமை (Permanent Residency/Australian Citizenship) பெற்று விட்டிருந்தால், தமிழ்நாட்டு/இந்திய அரசியல் நிகழ்வுகள் உங்களுக்குத் தேவையில்லா ஆணிகள். இங்கே வரி செலுத்த தொடங்கி விட்டால், இங்கே வசிக்கும்வரை, நீங்களும் ஒரு ஆஸ்திரேலியன்தான்.
உங்களில் எத்தனை பேருக்கு உங்கள் கவுன்சிலர் பெயர் தெரியும்? சந்தித்து பேசி இருக்கிறீர்களா? ஒரு பகுதிக்கு புதியதாக விடு மாறிப் போகும்போது, உங்களுக்கு உள்ளூர் அரசியல்வாதிகள் கடிதங்கள் அனுப்பி இருப்பார்கள் - கவனித்திருக்கிறீர்களா? ஏதாவது உள்ளூர் சிக்கலைத் தீர்க்க, புகார்/மனு கொடுத்து இருக்கிறீர்களா?
இந்நாட்டின் கடந்த 300 வருட வரலாற்றைப் படித்தால் ஒன்று புரியும். ஆஸ்திரேலிய வளர்ச்சிக்கு, பல்லினச் சமூகங்களின் (Multicultural Communities) உழைப்பும் பங்களிப்புகளும் ஏராளம். இச்சமூகங்களில், சட்டத் திட்டங்களுக்கு மதிப்புக் கொடுத்து, சண்டை சச்சரவுக்குப் போகாமல், அமைதியாக, கிடைத்ததை வைத்துக்கொண்டு “கடமை-கண்ணியம்-கட்டுப்பாடு" என வாழ்வதில் நமக்கு (இந்தியர்கள்/தமிழர்கள்) இணை யாருமில்லை.
இதனால்தான், அரசியல்வாதிகள் பொங்கல்/தீபாவளி போன்ற விழாக்களுக்கு அழைக்கும்போது நீங்கள் தவறாமல் வருகிறார்கள்; தமிழ் அமைப்புகளை பல்லின ஒருங்கிணைப்பு (Multicultural get-togethers) கூட்டங்களுக்கு தவறாமல் அழைக்கிறார்கள். நாமும் அவர்களோடு போட்டோ எடுத்துக்கொண்டு, பேஸ்புக், வாட்ஸப்பில் போட்டு அவர்களை இன்னும் பிரபலப்படுத்தவதோடு மறந்துவிடுகிறோம்.
இங்க எல்லாமே நல்லாதான் இருக்கு; குறை ஒன்றுமே இல்லையே என்கிறீர்களா? தமிழ்ச்சமூகத்திற்கு என்ன தேவை என்று கூடி பேசி பாருங்கள். மற்ற சமூகங்கள் என்ன உரிமையை கேட்டுப்பெறுகிறார்கள் என்று தெரிந்துகொண்டால் உங்களுக்குப் புரியும். உங்கள் சமூகத்தின் தேவைகளை மட்டுமல்ல, உள்ளூர் தேவைகளுக்கும் மற்ற சமூகத்தினரோடு தோளோடு தோள் நிற்போம்.
இங்கே நாம் நடத்தும் தமிழ்ப்பள்ளிகளுக்கு நிதி உதவி தேவை எனில், தயங்காமல் மாநில/மத்திய அரசுகளைக கேட்கலாம்; எல்லாமே நம் வரிப்பணம்தான். நம்மின கலை விழாக்கள் கொண்டாட, நம் பிரச்சனைகளை முறையிட, நேரடி அரசியலில் பங்கேற்க தமிழர்கள் முன்வரவேண்டும்.
குயின்ஸ்லாந்தின் அடுத்த உள்ளூராட்சி தேர்தல் 2020 மார்ச் 28 சனிக்கிழமையன்று நடைபெற இருக்கிறது. குயின்ஸ்லாந்தின் 77 கவுன்சில்களில் மேயர்கள் மற்றும் கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்க நல்ல வாய்ப்பு. உங்களுக்கு குடியுரிமை (Citizenship) இருப்பின், நேரம் ஒதுக்கி வேட்பாளர்களைப் பற்றி தெரிந்துகொண்டபின் ஓட்டு போடுங்கள்!
-திரு
#தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை
மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்
Comments