Skip to main content

ஆஸ்திரேலிய தினம்


TL;DR (சுருக்கம்) - தேவைப்படும் நேரங்களில் உதவி கேட்டால், முன்பின் தெரியாதவராய் இருந்தாலும் ஓடோடி வந்து உதவி செய்பவர்கள் ஆஸ்திரேலியர்கள். தேவைப்பட்டால் தயக்கமின்றி உதவி கேளுங்கள்; உதவி கேட்பவர்களுக்கு நீங்களும் உதவி வழங்குங்கள். இதுதான் Mateship (நட்புணர்வு) எனப்படும் ஆஸ்திரேலிய பண்பாடு.

ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு ஆஸ்திரேலிய தினம். வெயில் தாழும் மாலை நேரத்தில் கிளம்பி, குழந்தைகள், குடும்பமாக 8 பேர், இரண்டு வாகனங்களில் (ஒரு யூட் - Ute மற்றும் ஒரு ஆல் வீல் டிரைவ் - All Wheel Drive), அருகில் இருந்த கடற்கரைக்குச் சென்று வரலாமென்று கிளம்பினோம். சாலையிலிருந்து இறங்கி கடற்கரை மணலில், ஒரு சுற்று போய் விட்டு வீட்டுக்குப் போவதென்று திட்டம்.

சில நூறு மீட்டர் கடற்கரை மணலுக்குள் ஓடியபின், எங்களுக்கு முன்னால் சென்ற Ute வண்டி முன்செல்லாமல், நிலையாய் நின்று, அதன் சக்கரங்கள் மட்டும் வேகமாய்ச் சுழல ஆரம்பித்தன. மென்மையான கடற்கரை மணலில் சரியான பிடிப்பு இல்லாமல், சக்கரங்கள் வேகமாய் பள்ளம் தோண்ட, சில நொடிகளில் அந்த Ute வண்டி மணலில் மாட்டிக்கொண்டது.

பின் சென்ற எங்கள் காரின் சக்கரங்களும், மணலில் சுழன்று, குழி பறிக்க ஆரம்பித்தன. சுதாரித்துக்கொண்ட நான், அதை ஓட்டி வந்த என் நண்பரிடம், காரை நிறுத்திவிட்டு வாகனத்திலிருந்து எல்லோரையும் வெளியேறச் சொல்லி விட்டு, வண்டி ட்யூப்களின் காற்றை வெளியேற்றி, டயர் அழுத்தத்தை பாதியாகக் குறைத்து, காரை உயிர்ப்பித்தோம். வண்டி மெதுவாக பள்ளத்தில் இருந்து மேலேறியது.

'கம்ப்யூட்டரில் குப்பை கொட்டும் உனக்கு இவ்வளவு அறிவா' என்று அதிர்ச்சியடைய வேண்டாம்.கொஞ்ச நாள் முன்னாடிதான் நான் வேலை பார்த்த கம்பெனி என்னை ஒரு ஸ்பெஷல் பயிற்சிக்கு (4WD Training) அனுப்பி இதெயெல்லாம் கற்கச் சொல்லிருந்தார்கள். அந்த கதை மற்றோர் நாள் எழுதுகிறேன்!. ஆனாலும், முதல் வண்டி ரொம்ப ஆழமாக, பள்ளம் பறித்துப் படுத்து விட்டதால், அந்த குறிப்பு உதவவில்லை. வண்டியின் அடிப்பகுதி தரையைத் தொட்டிருந்தது.இந்த மாதிரி மாட்டிக்கொண்டால், ஆஸ்திரேலியாவில் உதவிக்கு Roadside Assistance எனும் சாலை உதவி வாகனத்தை அழைக்கலாம் (கட்டணச் சேவைதான்!). ஆனாலும் எங்களால் முடியவில்லை; ஏனெனில், சட்டப்படி (எங்கள் வாடகை கம்பெனி விதிகள் அப்படி!) வாடகைக் கார்களை சாலையில்லா இடங்களில் (Off-Road), கடற்கரை மணலில் ஓட்டயிருக்கவே கூடாது.

இன்னொரு வாகனம் வந்து இழுத்தால்தான் வண்டி வெளியே வரும். கடற்கரை ஏற்கனவே வெறிச்சோடி காணப்பட்டது. நீண்ட வாரயிறுதியானதால், அழைப்பதற்குத் தெரிந்த நண்பர்களும் ஊரில் இல்லை. சூரியன் முழுவதும் மறைந்து, அந்தி நேர வெளிச்சமும், இருளும் சூழ ஆரம்பித்திருந்தன. நல்ல உக்கிரமான வெயில் அடித்திருந்தும், சூரியன் மறைந்துவிட்டதால், நல்ல குளிர்ந்த கடற்கரை காற்று வீச ஆரம்பித்திருந்தது. யாருக்குத் தெரியும், 'இப்படி நட்ட நடுபீச்சில் வந்து மாட்டிக்கொள்வோம்' என்று.

தொலைவில், உள்ளூர்வாசிகள் (Aussies) சிலர் தங்கள் சுற்றுலா கூடாரங்கள், மீன்பிடி உபகரணங்கள் (fishing gear) ஆகியவற்றைக் மூட்டை கட்டிக்கொண்டு, வீடு கிளம்பிக் கொண்டிருந்தனர். எங்கள் Ute வண்டியை வெளியே இழுக்க அவர்களின் உதவியைக் கோரினோம். அவர்களில் ஒருவர் தானாக முன்வந்தார்; வண்டி இழுக்கப் பொருத்தமான கொக்கி, கயிறுகள் மற்றும் சக்தி வாய்ந்த Four Wheel Drive (4WD) வண்டி வைத்திருந்தார். அவர் வந்து தனது 4WD உடன் எங்கள் Ute வண்டியைக் கட்டி இழுக்க ஆரம்பித்தார். அவரது 4WD இழுக்க முடியாமல் திணறி, தானும் பள்ளம் பறித்துப்படுத்துவிட்டது. இப்போது வானம் கிட்டத்தட்ட கருப்பு நிறமாக மாறியிருந்தது.

அதற்குள், எங்கள் உதவிக்கு வந்த நபரின் நண்பர்கள் வந்து, அவரை, எள்ளி நகையாடிவிட்டு (வழக்கமான ஆஸி நகைச்சுவை!), மாட்டிக்கொண்ட அவரது 4WD வண்டியை முதலில் இழுத்துக் காப்பாற்றினர். ‘இப்போது உனக்கு மறுவாய்ப்பு! ​ உதவி கேட்டவர்களைக் காப்பாற்றி, நீயே உன் மானத்தை காப்பாற்றி கொள்கிறாயா...இல்லை..' என்று இழுத்தனர்.

இம்முறை, அவர் வெற்றிகரமாக, எங்கள் Ute வண்டியை மீட்டார். நாங்கள் மிக்க மகிழ்ச்சியாய் அவர்களுக்கு கைகுலுக்கி நன்றி தெரிவித்தோம். அவர்கள் தோள்களைக் குலுக்கி , ‘எந்த நேரத்திலும், உங்களுக்கு உதவுவது மகிழ்ச்சிதான் தோழர்களே!’ என்று சொல்லி விட்டு கிளம்பி போனார்கள். நாங்களும், வீட்டுக்கு வந்து சேர்ந்து, இரவு உணவு முடித்து, ஆஸ்திரேலியதின வாணவேடிக்கை (Fireworks) பார்த்து, அந்த நாளைக் கொண்டாடினோம்.

தேவைப்படும் நேரங்களில் உதவி கேட்டால், முன்பின் தெரியாதவராய் இருந்தாலும் ஓடோடி வந்து உதவி செய்பவர்கள் ஆஸ்திரேலியர்கள். தேவைப்பட்டால் தயக்கமின்றி உதவி கேளுங்கள்; உதவி கேட்பவர்களுக்கு நீங்களும் உதவி வழங்குங்கள்.

இதுதான் Mateship (நட்புணர்வு) எனப்படும் ஆஸ்திரேலிய பண்பாடு.

ஆஸ்திரேலிய தின வாழ்த்துகள்! #தமிழ் #தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை #ஆஸிதமிழன்

Comments

Popular posts from this blog

பறவையே, எங்கு இருக்கிறாய்!

TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you.   முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க;   ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல;  ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க,  அடுத்த பதின

அவர்களும், நானும்!

அவர்கள்: “என்னங்க... உங்க வீட்டு டிவி ரொம்ப சிறுசா இருக்கு?” நான்: எங்க வீட்ல பெருசா இருக்கிற 170 இன்ச் புத்தக அலமாரி-யை கவனிச்சீங்களா? அவர்கள்: “XYZ (Private School) பள்ளிக்கூடந்தான் (or ABC டீச்சர்தான்) பெஸ்ட் , என் பொண்ணு அங்கதான் படிக்கிறா..நீங்களும் உங்க பையன அங்க சேத்துடுங்களேன்” நான்: ஸ்கூல் பீஸ் கட்டறீங்கன்னா, இப்பவே நாங்க ரெடி!  அவர்கள்: “கார் வேற பழசாயிடுச்சு, வேற வாங்கிடுங்களேன்..” நான்: நீங்க எப்ப அனுமதி கொடுப்பீங்கன்னுதான், பணப்பையோட காத்துக்கிட்டிருந்தோம், தோ கிளம்பிட்டோம்! அவர்கள்: “வாங்கறதுதான் வாங்கறீங்க..புது காராவே வாங்கிடுங்களேன்...”  நான்: நீங்களே ஒண்ணு வாங்கி கொடுத்துடுங்களேன், நன்றியோடு வாங்கிக்கிறோம். கேஷா... கார்டா... ப்ரோ? அவர்கள்: "வெயிட் குறைக்கிறதெல்லாம் பெரிய மேட்டரே இல்ல ப்ரோ...டெய்லி வெறும் வயித்தில 'ஹாட் வாட்டர் + லெமன் ஜூஸ்' 45 நாள் விடாம குடிங்க.. வேற ஒண்ணும் செய்ய தேவையில்லை...சூப்பர்-ஆ ஸ்லிம் ஆயிடுவீங்க" நான்: வெயிட் குறைக்கிறதுக்கு டிப்ஸ் கேட்டனா நான்...? நான்: “உங்க பையனுக்குத் தமிழ் படிக்க சொல்லிக்

கல் தோன்றி, மண் தோன்றா

  “கல்  தோன்றி,  மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தகுடி தமிழ்க் குடி”  இந்த Punch  Dialogue-ஐ  சொல்லி ஆரம்பிக்கப்பட்டு, கைதட்டல் வாங்கிய தமிழ்ப்  பேச்சுகள் தமிழ் மேடைப் பேச்சு வரலாற்றில் மூவாயிரம் கோடியே முன்னூற்று முப்பத்து மூணு இருக்கும்.   முனைவர் கண்ணபிரான் ரவிசங்கர் (கரச) எழுதிய ‘ அறியப்படாத தமிழ்மொழி ’ என்னும் புத்தகத்தை  படிக்கும்வரை நானும் ஏதோ ஒரு புலவர்  பிற்காலத்தில் வரப்போற, ‘ஓங்கி அடிச்சா  ஒன்றரை டன்ன்னுடா’க்கு கைதட்டி குதுகலிக்கும் தமிழ் மக்களுக்கு புகழ்ச்சி புடிக்கும்ன்னு இதை எழுதி வைச்சிட்டு போயிட்டாரோன்னு கடந்து போயிருக்கேன்.   அதெப்படி? கல்,  மண் தோன்றுமுன்னே தமிழ்க் குடிமக்கள் பிறந்து விட்டார்களா? இல்ல, தமிழ் மொழி மற்ற மொழிகளை  விட அவ்வளவு பழமையானதா? ன்னு  ஆராய்ச்சி செஞ்சு புத்தகத்தின் முதல் கட்டுரையாக  எழுதி இருக்கார் கரச (https://twitter.com/kryes)   சரி,  எங்கே  இருந்து வந்தது இந்த இரண்டு வரிகள்? ஐயனாரிதனர் என்பவர் எழுதிய புறப்பொருள் வெண்பா மாலை என்ற இலக்கண நூலில் வரும் பாடல்தான் அது.  பொய் அகல, நாளும் புகழ் விளைத்தல் என் வியப்பாம்?  வையகம் போர்த்த, வயங்கு ஒலிநீ