Gympie என்ற ஊரின் பெயரை எப்படி உச்சரிப்பீங்க? ஜிம்பை? கைம்பை? ஜிம்பி? அங்கு வசிக்கும் மக்களைக் கேட்டால் "கிம்ப்பி" என்று சொன்னார்கள். இக்கிராமத்தில் இரண்டு வருடம் வசித்த சாதனை எங்களுக்கு உண்டு. ஏன் சாதனை என்று இன்னொரு நாள் சொல்றேன்.
கிம்ப்பி என்பது அப்பகுதியில் வசித்து வந்த கபி-கபி (Kabi Kabi) இன பழங்குடியினரின் அபாரிஜினல் மொழிச் சொல்லிலிருந்து வந்தது; சாத்தான் போன்ற (devil-like) என்று பொருள். கிம்ப்பி-கிம்ப்பி என்பது தொட்டால் தேள் போன்று கொட்டி எரிச்சலை ஏற்படுத்தும் மரம் (Stinging Tree). இம்மரத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்த Dr. மரீனா ஹர்லி (Marina Hurley) "கிம்ப்பி-கிம்ப்பி இலைகள் ஏற்படுத்துவது நீங்கள் நினைத்துப் பார்க்கக்கூடிய மிக மோசமான வலி. உங்கள் தோல் சூடான அமிலத்தால் எரிக்கப்படும் அதே நேரத்தில் மின்சாரம் பாய்ச்சுவது போன்றது அந்த வலி" என்கிறார். 1-2 மீட்டர் உயரமுள்ள இம்மரத்தின் இலை/தண்டு/கிளைகளில் இருக்கும் சிறிய, கண்ணுக்குத் தெரியக் கூடிய அடர்த்தியான மயிர்/முட்களே இந்த எரிச்சலை ஏற்படுத்துகின்றன. கிம்ப்பி கிம்ப்பி மாதிரி மொத்தம் நான்கு வகை தாவரங்கள் குயீன்ஸ்லாண்ட் மற்றும் நியூ சவுத் வேல்ஸ் மாநிலங்களில் மழைக்காடுகளில் உள்ளன.
கிம்ப்பி கிம்ப்பி மரம் பத்தி இப்ப தெரிஞ்சுட்டீங்களா? |
கிம்ப்பி பகுதிக்கு முதன் முதலில் குடிபெயர்ந்த பிரிட்டிஷ்/ஐரோப்பியர்கள் ஆடு, மாடு மேய்த்து வாழ்ந்து வந்தனர். ஆரம்பத்தில் இங்கு புலம்பெயர்ந்து வந்த ஐரோப்பியர்களில் ஒரு சிலர், டாய்லெட் பேப்பர் தீர்ந்துவிட்டது என்று பரந்து விரிந்த கிம்ப்பி-கிம்ப்பி இலைகளை உபயோகிக்க... பின்விளைவுகளை நீங்களே கற்பனை செய்துகொள்ளலாம்! சில வண்டுகளும், சிவப்புக் கால் வாளபி/சிறிய கங்காரு (Red-legged Pademelon) வகையறாக்களும், இந்த இலைகளை கண்டால் சாப்பிட்டு, நன்றாக மொட்டை அடித்துவிடுகின்றன. இங்கேயே பிறந்து வாழ்ந்த பழங்குடி மக்கள், மல்பெரி பழங்களை போல இருக்கும் கிம்ப்பி-கிம்ப்பி மரங்களின் பழங்களைப் பறித்துச் (முட்கள் மேல் கைபடாமல்தான்) சாப்பிட்டு வந்தனர்.
சரி, இதுக்கு மருந்து, மருத்துவம் ஏதாவது இருக்கா? கிம்ப்பி கிம்ப்பி இலை உங்கள் மீது பட்டுவிட்டால், முதலில் அரிக்கும், ஆனால் சொறியாமல்/தேய்க்காமல் wax strip உதவியால் முட்களை அகற்ற வேண்டும். ஹைட்ரோகுளோரிக் அமிலத்தின் நீர்த்த கரைசலைப் பாதிக்கப்பட்ட தோல் பகுதியில் ஊற்றி குணப்படுத்தலாம் என்று AUSTROP நிறுவனம் பரிந்துரைக்கிறது.
ஆதலால், நீங்கள் தேசிய பூங்கா மற்றும் மழைக்காடுகளில் நடைபயணம் (Bushwalking) சென்றால், நியமிக்கப்பட்ட நடைபாதைகளில் (Walking tracks) பயணியுங்கள். பாதங்களை பாதுகாக்கக் காலணிகள் (Closed toe shoes) மற்றும் நீண்ட பேண்ட் (long pant) அணியுங்கள். இந்த மாதிரி தாவரங்களை கண்டறிய தெரிந்து கொள்ளுங்கள்.
-திரு
Gympie Gympie: Once stung, never forgotten https://www.australiangeographic.com.au/topics/science-environment/2009/06/gympie-gympie-once-stung-never-forgotten/
Stinging plants http://www.bushwalking101.org/stinging-plants/
‘The worst kind of pain you can imagine’ – what it’s like to be stung by a stinging tree http://theconversation.com/the-worst-kind-of-pain-you-can-imagine-what-its-like-to-be-stung-by-a-stinging-tree-103220
மற்ற பதிவுகள் https://www.facebook.com/hashtag/ஆஸிதமிழன்
#தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியா #ஆஸ்திரேலியவாழ்க்கை #அறிவியல் #தாவரவியல்
Comments