கடந்த சனிக்கிழமை, தாய்த்தமிழ்ப்பள்ளியின் இலக்கிய விழா சிறப்பாய் நடைபெற்றது. விஷ்ணு கலந்துகொள்வது இதுவே முதல் முறை. சிறுவர் சிறுமியர் ஒவ்வொருவரும் மேடை ஏறி, ஒலிப்பெருக்கியில் (மென்குரலில் பேசும் குழந்தைகளுக்கு மிகவும் உதவியது), நூற்றுக்கும் மேற்பட்டோர் கூடி இருந்த அவையின் முன்பு தமிழ்ப் பேசும்படி அமைத்திருந்தது நன்றாக இருந்தது. தமிழ்ப் பாட்டு, திருக்குறள், பேச்சுப்போட்டி, எழுத்துப்போட்டி என்று பாலர் பிரிவு (Pre-School Kindy) முதல் ஏழாம் வகுப்பு+ வரை பயிலும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு அசத்தலாய் தமிழ்த் திறமையை வெளிப்படுத்தி மகிழ்வித்தனர்.
'பேசிக்கலி நான் ஒரு ஷை டைப்' என்று என்னைப் போல் இருக்கும் விஷ்ணுவுக்கு நாங்கள் வைத்த இலக்கு 'மேடை ஏறி நடுவர்கள் முன் மனனம் செய்தத் தமிழ்ப்பாட்டை முழுமையாக சொல்லி விட வேண்டும், அவ்வளவே'. அதற்கு பரிசும் (Beyblade - மாடர்ன் பம்பரம்) நாங்களே வாங்கி வைத்து விட்டோம். தெரிந்த நண்பர்களிடத்தில் கூட அந்தப் பாடலைச் சொல்லாத விஷ்ணு, பெருந்திரளாய் மக்கள் கூடியிருந்த இலக்கிய விழாவில் நிறுத்தி, நிதானமாய் சரியான உச்சரிப்புடன் சொல்லி முடித்தது நெகிழ்ச்சியாய் இருந்தது. கூடவே இருக்கும் எங்களுக்குத் தெரியும், இதுவரை இதுதான் விஷ்ணுவின் மிகச் சிறந்த முயற்சி (Personal Best).
மனனம் செய்யப்பட்ட பாடலின்/திருக்குறளின் பொருள் குழந்தைகள் தெரிந்து வைத்துள்ளனரா என்று ‘சோதனை’ செய்தனர் நடுவர்கள். போட்டியின் நடுவர்கள் மிகவும் அன்போடும், பொறுமையோடும் குழந்தைகளை பயமுறுத்தாமல் (இவங்கள பயமுறுத்திட்டாஆஆஆலும்...!) கேள்வி கேட்டது சிறப்பாய் இருந்தது. நடுவர்களுக்கு நன்றி! சில குழந்தைகள் பதில் தெரியாமல்,மிகவும் சாந்தமாக தோளைக் குலுக்கி 'யோவ், அதான் இவ்ளோ சொன்னேன்ல...புரிஞ்சுக்காம இன்னும் கேள்வி கேக்குற!' என்பது மாதிரி பார்த்தது கொள்ளை அழகு. நடுவர்களும், பார்வையாளர்களும் ரசித்தனர்.
கூடியிருந்த அனைவரும் அமைதியாய், பொறுமையாய் குழந்தைகள் சொன்ன பாடல்கள்/திருக்குறள்கள்/பேச்சுகளைக் கேட்டு, அவர்களை கரவொலிகள் மூலம் உற்சாகப்படுத்தினர். ஒவ்வொருப் போட்டி பிரிவின் முடிவிலும், பங்கு பெற்ற அனைத்துக் குழந்தைகளுக்கும் உடனடி பரிசு வழங்கியதும் நன்றாக இருந்தது. ஏழாம் வகுப்புக்கு மேல் படிக்கும் மாணவியர்களுக்கு, வெறும் ஒரு மணி நேரத்திற்க்குமுன் தலைப்புகள் வழங்கப்பட்டு, முன்னேற்பாடு எதுவும் இன்றி துணிவோடு பேச்சுக்களை (Impromptu Speech) பேசி அசத்தினர்.
சில குழந்தைகள் ஓரிரு வார்த்தைகளை மறந்துவிட்டோ, மற்றக் குழந்தைகள் கை, கால்களை ஆட்டி, கிட்டத்தட்ட 'தனி நடிப்பு' ரேஞ்சுக்கு சொல்வதைப் பார்த்தோ, தான் சரியாக பாட்டைச் சொல்லவில்லை என்றோ மேடையிலிருந்து கீழே இறங்கியதும் அழுதுவிட்டனர். பேச்சுப் போட்டிக்கு உடல் மொழி தேவையில்லை; குரலில் ஏற்றத்தாழ்வு, சரியான உச்சரிப்பு போதும் என்பது என் தாழ்மையான எண்ணம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் 'ஆஸ்ட்ரேலியாவில், இம்மாதிரியான தமிழ்ப் போட்டிகளில் பங்கு பெறுவதே பெரிய வெற்றிதான், மேடையேறிய குழந்தைகள் அனைவருமே வெற்றியாளர்கள்தான்' என்று நினைவுபடுத்தினார். போட்டிகளை ஒருங்கிணைத்து நடத்திய திருமதி. சத்யா இளையப்பன், திருமதி.சுகன்யா செல்வராஜ் மற்றும் தாய்த்தமிழ்ப்பள்ளியின் செயற்குழுவுக்கு நன்றிகளும் பாராட்டுகளும்.
அடுத்த ஆண்டு, பெற்றோர்கள் இன்னும் நிறைய குழந்தைகளை தமிழ்ப் பேச ஊக்குவிக்கவேண்டும். போட்டியில் வெற்றி பெறுதல் நல்லது; பங்கு பெறுதல் அதனினும் மேலானது.
இதோ, ஆஸ்ட்ரேலிய அளவிலான அடுத்த தமிழ்ப்போட்டி வந்து விட்டது. "அவுஸ்திரேலிய பட்டதாரிகள் தமிழர் சங்கம்" நடத்தும் 2019 தமிழ் ஊக்குவிப்புப் போட்டிகளில் (https://www.tamilcompetition.org.au) பங்கு பெற விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி 15/06/2019. கடந்த 25 வருடங்களாக நடைபெறும் இப்போட்டி, இவ்வருடம் "கனவு மெய்ப்படும்" என்ற கருப்பொருளில் கவிதை மனனப்போட்டி, பேச்சுப் போட்டி, வாய்மொழித் தொடர்பாற்றல் போட்டி, எழுத்துப் போட்டி ஆகியன நடைபெற இருக்கின்றன. இப்போட்டியின் ஒரு சிறப்பு, பங்கு பெறும் போட்டியாளர்களுக்கு ஆறுதல் பரிசாக அவர்கள் பெயர் பதித்த கோப்பை* வழங்கப்படும்.
*விதிமுறைகளுக்கு பார்க்க https://www.tamilcompetition.org.au/information-pack
#தமிழ்ப்பதிவு #ஆஸ்ட்ரேலியா #ஆஸிதமிழன் #ஆஸ்திரேலியவாழ்க்கை
TLDR; If you merely wish for something and do nothing, you may not get it. If you seek with intent, the universe will bring it to you. முன்னொரு காலத்துல கிம்ப்பியில் (Gympie, QLD) வாழ்ந்தப்ப, ஒரு நாள் காலங்காத்தால 6 மணிக்கு கொக்கரக்கோன்னு கோழி கூவறதுக்கு முன்னால, அந்த பறவையோட பாடலை முதல் முதலாக் கேட்டேன். குரல் ரொம்ப நல்லாவும், பாட்டு வித்தியாசமாவும் இருந்ததால, என்ன பறவையா இருக்கும்னு தூக்கத்தை மறந்து யோசிச்சேன். அந்தப் பறவை எப்படி இருக்கும்னு பார்க்க ஆசையா வந்துந்துச்சு. (கவிதை மொழியில் யாரோ ஒரு பெண்ணை உருவகப்படுத்தல ப்ரோ; சத்தியமா பறக்கிற பறவையேதான்!) அப்புறம், காலைப்பசி வந்ததும், ஆர்வம் பறந்துபோய், இன்னொரு நாள் பாத்துக்கலாம்னு, மூக்கு புடிக்க சாப்டுட்டு, ஆபீஸ் போய்ட்டேன். இது சில, பல நாட்கள் தொடர்ந்தது. பாக்காமலே, அந்த பறவை மேல ஒரு ‘இது’. இதுன்னா, ஒரு ஆர்வம். ஒரு நாள், அந்தப் பறவையை அடையாளம் காண முடியுமான்னு ஆபீஸ் நண்பரிடம், கேட்டேன். ‘பார்க்க எப்படி இருந்துச்சு?’ன்னு அவர் கேக்க; ‘பார்க்கவே இல்லையே!’ நான் சொல்ல; ‘குரல் எந்த மாதிரி பேட்டர்ன்’ன்னு திரும்ப அவர் கேட்க, அடுத்த பதின
Comments